
அப்பாவையே திருமணம் செய்துகொண்ட மகள் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:
உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive
நடுத்தர வயதுடைய ஆண் ஒருவர் இளம் பெண்ணை திருமணம் செய்து அழைத்து வருவது போலவும், அவர்களிடம் மூன்றாவதாக ஒருவர் பேட்டி எடுப்பது போன்ற வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. அதில், “24 வயது பெண் தன்னுடைய சொந்த 50 வயது தந்தையை திருமணம் செய்தார்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. பேட்டியில் அந்த பெண்ணும், “இவர் என்னுடைய தந்தை” என்று கூறுகிறார்.
நிலைத் தகவலில், “அப்பனையே கல்யாணம் செய்து கொண்ட பெண் சரஸ்வதிய பிரம்மா கல்யாணம் செஞ்சப்போ நான் என் அப்பன கட்டினது என்ன தப்பு
எந்த நாயும் எங்களுக்கு அட்வைஸ் பண்ண வேண்டாம் *இதுதாண்டா ஆரிய சனாதன மாடல் நல்லா சத்தமா சொல்லுங்க பாரத் ஆத்தாக் கி” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த வீடியோவை பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
தந்தை தன் மகளையே திருமணம் செய்து கொண்டார் என்றும், இந்து கடவுளான பிரம்மாவே தன் மகளை மணந்து கொண்ட போது, நான் என் அப்பாவைத் திருமணம் செய்வதில் என் தவறு என்று தந்தையை திருமணம் செய்த மகள் கேட்டதாக பலரும் சமூக ஊடகங்களில் வீடியோவை பதிவிட்டு வருகின்றனர். இது தான் சனாதனதர்மம் என்று பலரும் இந்த வீடியோவை விமர்சித்து வருகின்றனர். ஆனால், பார்க்க இந்த வீடியோ ஸ்கிரிப்டட் வீடியோ போல் உள்ளது.
இதற்கு முன்பு கூட ஒரே பெண்ணை மணந்துகொண்ட அப்பா -மகன், தங்கையைத் திருமணம் செய்த அண்ணன், மகளைத் திருமணம் செய்த அப்பா என்று தொடர்ந்து ஸ்கிரிப்டட் வீடியோக்களை உண்மை என்று நம்பி பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டிருந்தனர். அது தவறானது என்று நம்முடைய ஃபேக்ட் கிரஸண்டோவில் கட்டுரை வெளியிட்டிருந்தோம். இதுவும் அதுபோல இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் ஆய்வை தொடங்கினோம்.
வீடியோ காட்சியை புகைப்படங்களாக மாற்றி கூகுள் லென்ஸ் தளத்தில் பதிவேற்றித் தேடினோம். அப்போது டெல்லியைச் சேர்ந்த ஸ்கிரிப்டட் வீடியோக்களை தயாரிப்பதாகக் கூறிக்கொள்ளும் ஒருவர் தன்னுடைய யூடியூப் பக்கத்தில் இந்த வீடியோவை பதிவிட்டிருந்ததைக் காண முடிந்தது. ஆனால், வீடியோ ஸ்கிரிப்டட் என்று தொடக்கத்திலோ, இறுதியிலோ குறிப்பிடப்படாமல் இருந்தது. ஆனால், இதே போன்று ஏராளமான வீடியோக்கள் அந்த யூடியூப் பக்கத்தில் பதிவிடப்பட்டிருந்தது.
யூடியூபில் நமக்குக் கிடைத்த வீடியோவை மறுபடியும் பார்த்த போது சரியாக, 47வது விநாடியில் மின்னல் போல “Disclaimer” வந்து சென்றது. அதில், “இந்த வீடியோ பொழுதுபோக்கு நோக்கில் தயாரிக்கப்பட்டது. இனம், நிறம், தேசிய இனம், வயது, மதம், பாலினம், உடல் குறைபாடு உள்ளிட்டவை அடிப்படையில் தவறான தகவல் அல்லது அவமரியாதை செய்யும் நோக்கில் உருவாக்கப்பட்டது இல்லை” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இதன் மூலம் இது ஸ்கிரிப்டட் வீடியோ என்பது தெளிவாகிறது.
இந்த வீடியோவை வெளியிட்டவர்கள் இதை ஸ்கிரிப்டட் வீடியோ என்று அனைவரும் பார்க்கும் வகையில் பதிவிடவில்லை. ஒரு விநாடிக்கும் குறைவான நேரத்தில் மின்னல் போல வந்து மறையும் வகையில் பொறுப்பு துறப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். லைக்ஸ், வியூஸ் அதிகமாக கிடைக்க இப்படி வீடியோக்களை தொடர்ந்து வெளியிட்டு வந்திருப்பதைக் காண முடிகிறது. இது தெரியாமல் இது உண்மை சம்பவம் போல பலரும் சமூக ஊடகங்களில் வதந்தியைப் பரப்பி வந்துள்ளனர்.
நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட வீடியோவில் தந்தையாக வந்தவர் நடித்த வேறு பல வீடியோக்களும் நமக்குக் கிடைத்தன. இவை எல்லாம் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட வீடியோ உண்மையானது இல்லை என்பதை உறுதி செய்கின்றன.
முடிவு:
ஸ்கிரிப்டட் வீடியோவை உண்மை என்று நம்பி தந்தையை திருமணம் செய்த மகள் என்று தவறாக சமூக ஊடகங்களில் வதந்தி பரப்பியிருப்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…
Facebook I X Post I Google News Channel I Instagram
