FACT CHECK: மழை வெள்ளத்தில் நீச்சல் அடித்து மகிழும் சென்னை மக்கள் என நியூஸ் கார்டு வெளியிட்டதா புதிய தலைமுறை?
சென்னையில் பெய்த கன மழையினால் மக்கள் மகிழ்ச்சியாக குளித்து நீச்சல் அடித்து வருகின்றனர் என்று புதிய தலைமுறை செய்தி வெளியிட்டதாக சமூக ஊடகங்களில் சிலர் பகிர்ந்து வருகின்றனர். இது உண்மையா என்று ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:
அசல் பதிவைக் காண: Facebook I Archive
புதிய தலைமுறை வெளியிட்டது போன்ற நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், "சென்னையில் பெய்த கனமழையினால் மக்கள் மகிழ்ச்சியாக குளித்து நீச்சல் அடித்து வருகின்றனர்! மகிழ்ச்சியில் மக்கள் முதல்வருக்கு நன்றி தெரிவித்து வருகின்றனர்" என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த பதிவை நீல மாக்கான் என்ற ஃபேஸ்புக் ஐடி கொண்ட நபர் 2021 நவம்பர் 7ம் தேதி பதிவிட்டுள்ளார். பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
சென்னையில் கன மழை பொழிந்து வரும் சூழலில் இது பற்றி தமிழக ஊடகங்கள் உண்மையை வெளியிடாமல் அரசுக்கு ஆதரவாக செய்தி வெளியிட்டு வருவது போன்று சமூக ஊடகங்களில் கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்படுகிறது. இதற்காக தமிழ்நாட்டுக்கு தொடர்பில்லாத படங்கள், 2015ம் ஆண்டு சென்னையில் ஏற்பட்ட கன மழை வெள்ளப் பெருக்கு படங்கள் எல்லாம் பகிர்ந்து வருகின்றனர். அவற்றைப் பற்றித் தொடர்ந்து நம்முடைய ஃபேக்ட் கிரஸண்டோ தமிழில் கட்டுரை வெளியிட்டு வருகிறோம்.
இந்த சூழலில், மழை வெள்ளத்தில் மக்கள் மகிழ்ச்சியாக குளித்து நீச்சல் அடித்து வருகின்றனர், முதல்வருக்கு நன்றி தெரிவித்தனர் என்று புதிய தலைமுறை வெளியிட்டது போன்று நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. இந்த நியூஸ் கார்டு உண்மையில் புதிய தலைமுறை வெளியிட்டது போல இல்லை. அதன் தமிழ் ஃபாண்ட் வித்தியாசமாக இருந்தது. பின்னணி வாட்டர் மார்க் லோகோ வித்தியாசமாக இருந்தது. எனவே, இந்த நியூஸ் கார்டு உண்மைதானா என்று ஆய்வு செய்தோம்.
இந்த நியூஸ் கார்டில் நவம்பர் 7, 2021 என்று தேதி குறிப்பிடப்பட்டிருந்தது. எனவே, நவம்பர் 7ம் தேதி புதிய தலைமுறை வெளியிட்ட நியூஸ் கார்டுகளை அதன் ஃபேஸ்புக் பக்கத்தில் பார்வையிட்டோம். அப்போது, நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்டது போன்று எந்த ஒரு நியூஸ் கார்டும் கிடைக்கவில்லை. எனவே, போலியாக இந்த நியூஸ் கார்டை உருவாக்கியிருப்பது தெரிந்தது.
இந்த நியூஸ் கார்டு போலியானது என்பதை உறுதி செய்ய, புதிய தலைமுறை டிஜிட்டல் பிரிவு நிர்வாகி சரவணனைத் தொடர்புகொண்டு கேட்டோம். அவரும் இது போலியானதுதான் என்று உறுதி செய்தார். இதன் அடிப்படையில் சென்னையில் பெய்த கனமழையினால் மக்கள் மக்கள் மகிழ்ச்சியாக குளித்து நீச்சல் அடித்து வருகின்றனர், மகிழ்ச்சியில் முதல்வருக்கு நன்றி தெரிவித்து வருகின்றனர் என்று புதிய தலைமுறை வெளியிட்டதாகப் பகிரப்படும் நியூஸ் கார்டு போலியானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
கன மழையினால் சென்னை மக்கள் மகிழ்ச்சியாக நீச்சல் அடித்து மகிழ்ந்து வருகின்றனர் என்று புதிய தலைமுறை வெளியிட்டதாக பரவும் நியூஸ் கார்டு போலியானது என்பதை தகுந்த ஆதாரங்களுடன் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…
Facebook I Twitter I Google News Channel
Title:மழை வெள்ளத்தில் நீச்சல் அடித்து மகிழும் சென்னை மக்கள் என நியூஸ் கார்டு வெளியிட்டதா புதிய தலைமுறை?
Fact Check By: Chendur PandianResult: False