உத்தரப்பிரதேசத்தில் இடிக்கப்படும் கிறிஸ்தவ தேவாலயம் என்று பரவும் வீடியோ உண்மையா?

Communal Partly False தேசிய அளவில் I National

உத்தரப்பிரதேசத்தில் கிறிஸ்தவ தேவாலயம் ஒன்று இடிக்கப்படும் காட்சி என்று வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive

கிறிஸ்தவ ஆலயம் ஒன்றின் மேல் வைக்கப்பட்டிருந்த சிலுவைகளை ஒருவர் உடைக்கும் வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. கீழே கூடியிருந்த மக்கள் ஜெய்ஶ்ரீராம் என்று கோஷம் எழுப்புகின்றனர். வீடியோவின் மீது “தேவாலங்கள் தாக்கபடுகிறதா? உத்தரப்பிரதேசத்தில் கிறிஸ்தவர்களுக்கு எதிர்ப்பு” என்று எழுதப்பட்டிருந்தது. இந்த வீடியோவை பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

மேற்கு வங்கத்தில் சில வாரங்களுக்கு முன்பு கட்டப்பட்டு வரும் கிறிஸ்தவ ஆலயத்தை சிலர் தாக்கியதாக செய்தி வெளியானது. அந்த ஆலயத்தின் மீது வைக்கப்பட்டிருந்த சிலுவையை ஒருவர் உடைக்கும் காட்சி அப்போது சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டது. அந்த வீடியோவை எடுத்து உத்தரப்பிரதேசத்தில் நடந்ததாக சிலர் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

உண்மைப் பதிவைக் காண: thewire.in I Archive

எனவே, இந்த வீடியோ உத்தரப்பிரதேசத்தைச் சார்ந்தது இல்லை என்பதை உறுதி செய்வதற்கான ஆய்வை மேற்கொண்டோம். வீடியோ காட்சிகளை புகைப்படங்களாக மாற்றி கூகுள் லென்ஸ் தளத்தில் பதிவேற்றித் தேடினோம். அப்போது மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தா புறநகர்ப் பகுதியான தெற்கு 24 பர்கானா மாவட்டம் சோனர்பூரில் 2026 ஜூலை 5ம் தேதி பிற்பகல் 3 மணி அளவில் இந்த சம்பவம் நடந்ததாக செய்திகள் நமக்கு கிடைத்தன. 

அந்த பகுதியில் மிகச் சிறிய அளவில் வசித்து வரும் வங்க மொழி பேசும் கிறிஸ்தவர்கள் இந்த ஆலயத்தை கட்டியதாக குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால், இந்த இடத்தில் கிறிஸ்தவ ஆலயம் கட்டக்கூடாது என்று கூறி சிலர் சிலுவைகளை உடைத்து வன்முறையில் ஈடுபட்டதாக செய்திகளில் குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும் இந்த சம்பவம் தொடர்பாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு மூன்று இளைஞர்களை போலீசார் கைது செய்து விசாரணை செய்து வருவதாகவும் தற்போது அங்கு அமைதி நிலவுவதாகவும் செய்திகள் கிடைத்தன.

Archive

இந்தியன் எக்ஸ்பிரஸ் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று அந்த பகுதி மக்கள், ஆலயத்தை கட்டி வரும் கிறிஸ்தவர்கள் என அனைத்து தரப்பினரின் பேட்டியையும் எடுத்து யூடியூபில் வெளியிட்டிருந்தது. அவர்கள் இந்த சம்பவம் மேற்கு வங்கத்தில் நடந்தது என்பதை உறுதி செய்தனர். இந்த ஆதாரங்கள் அடிப்படையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவானது பாதி உண்மை, பாதி தவறான தகவல் கொண்டது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

மேற்கு வங்கத்தில் கிறிஸ்தவ ஆலயம் கட்ட எதிர்ப்பு தெரிவித்து சிலுவைகள் உடைக்கப்பட்ட சம்பவத்தின் வீடியோ உத்தரப்பிரதேசத்தில் நடந்தது என்று தவறாக சமூக ஊடகங்களில் பகிர்ந்திருப்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I X Post I Google News Channel I Instagram

Result Stamp

Title: உத்தரப்பிரதேசத்தில் இடிக்கப்படும் கிறிஸ்தவ தேவாலயம் என்று பரவும் வீடியோ உண்மையா?

Fact Check By: Chendur Pandian

Result: Partly False

Leave a Reply