
‘’பாஜக தலைவர்களுடன் சீமான் ரகசிய சந்திப்பு,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் தற்போது பகிரப்பட்டு வரும் தகவலை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம்.
தகவலின் விவரம்:
இதில், தமிழ் நாளிதழ் ஒன்றில் வெளியான செய்தியின் ஸ்கிரின்ஷாட்டை இணைத்துள்ளனர். அதன் தலைப்பை வைத்து, கூகுளில் நாமும் தகவல் தேடினோம். அப்போது, அந்த செய்தியை தினகரன் நாளிதழ் வெளியிட்டதும், பின்னர் டெலிட் செய்துவிட்டதையும் கண்டோம்.
ஆனால், தினகரன் இணையதளத்தில் இந்த செய்தியை அகற்றிவிட்டனர்.
எனினும், இதே செய்தியை Dailyhunt ஆப்பில் நாம் காண முடிகிறது. தினகரன் டெலிட் செய்துவிட்டாலும், டெய்லிஹண்டில் அப்படியே வைத்துள்ளனர். அதன் லிங்க் கீழே இணைத்துள்ளோம்.
இப்படியாக தினகரன் ஊடகம் குழப்பத்துடன் வெளியிட்ட ஒரு செய்தியை ஃபேஸ்புக் வாசகர்கள், உண்மையா, பொய்யா என்று தெரியாமலேயே வைரலாக ஷேர் செய்து வருவதைக் கண்டோம்.
உண்மை அறிவோம்:
தினகரன் நாளிதழ் இந்த செய்தியை முதலில் வெளியிட்டுவிட்டு, பின்னர் இதனை டெலிட் செய்ததில் இருந்தே, இந்த செய்தியில் தவறான தகவல் உள்ளதாக, யூகிக்க முடிகிறது.
தொடர்ந்து, நாம் ரிவர்ஸ் இமேஜ் செய்து, தகவல் தேடியபோது, மேற்கண்ட புகைப்படம் 2017ம் ஆண்டில் இருந்தே இணையத்தில் பகிரப்பட்டு வரும் ஒன்று என தெரியவந்தது.
இதுதொடர்பாக, 2017ம் ஆண்டில் வெளியிடப்பட்ட ஃபேஸ்புக் பதிவு ஒன்றையும் கீழே இணைத்துள்ளோம்.
இதைத்தொடர்ந்து, மேலும் விரிவாக தகவல் தேடினோம். நமது ஊடக நண்பர்களின் உதவியுடன் நீண்ட முயற்சி செய்து, சீமான், அர்ஜூன் சம்பத் மற்றும் வானதி ஆகியோர் ஒன்றாக இருக்கும் இந்த புகைப்படம் எங்கே எடுக்கப்பட்டது என்ற விவரத்தைக் கண்டறிந்தோம்.
அதன்படி, கடந்த 2017ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில், நியூஸ் 7 தமிழ் ஊடகம் நடத்திய சிறப்பு விவாதம் ஒன்றில் பங்கேற்க அவர்கள் வந்தபோது எடுத்த புகைப்படம்தான் இது.
அந்த சிறப்பு விவாதம் பற்றிய லிங்க் கீழே தரப்பட்டுள்ளது.
குறிப்பிட்ட புகைப்படத்தில் அவர்கள் அணிந்தபடி உள்ள ஆடைகளின் நிறமும், நாம் கண்ட டிவி விவாதத்தின் வீடியோவில் உள்ள அவர்களின் தோற்றமும் சரியாக பொருந்துகிறது.
எனவே, 2017ல் டிவி விவாத நிகழ்ச்சியின்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை வைத்து, 2021 சட்டமன்ற தேர்தலில் சீமான், பாஜக தலைவர்களுடன் ரகசிய சந்திப்பு நடத்தினார், என்ற தவறான தகவலை பரப்பியுள்ளனர் என்று சந்தேகமின்றி தெளிவாகிறது.
முடிவு:
உரிய ஆதாரங்களின் அடிப்படையில் நாம் ஆய்வு மேற்கொண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

Title:பாஜக தலைவர்களுடன் ரகசிய சந்திப்பு நடத்தினாரா சீமான்?- முழு விவரம் இதோ!
Fact Check By: Pankaj IyerResult: Missing Context
