
கேரளாவில் தங்கையை பாலியல் வன்கொடுமை செய்ய வந்தவனின் ஆணுறுப்பை வெட்டிய அண்ணன் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive
வீட்டுக்குள் இருந்து ஒருவர் ரத்தம் சொட்ட சொட்ட வரும் வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “தங்கையை கற்பழிக்க வந்தவரின் ஆணுறுப்பை வெட்டிய அண்ணன்!!
இந்தியா கேரளாவில் இடம்பெற்றதாக சமூக ஊடகங்களில் வைரலாகி வரும் #வீடியோ” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த வீடியோவை பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
கேரளாவில் தங்கையை பாலியல் வன்கொடுமை செய்ய வந்த நபரின் ஆண் உறுப்பை வெட்டிய அண்ணன் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. கேரளாவில் எங்கு, எப்போது இந்த சம்பவம் நடந்தது என்று எந்த தகவலும் இல்லை. எனவே, இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.
கூகுளில் தங்கையை வன்கொடுமை செய்ய வந்தவனை வெட்டிய அண்ணன் என்று சில அடிப்படை வார்த்தைகளைப் பயன்படுத்தி செய்தி ஏதும் வெளியாகி உள்ளதா என்று தேடினோம். ஆனால், கேரளாவில் அப்படி ஒரு சம்பவம் நடந்ததாக எந்த ஒரு செய்தியும் நமக்கு கிடைக்கவில்லை. எனவே, வீடியோ காட்சிகளை புகைப்படங்களாக மாற்றி கூகுள் லென்ஸ் தளத்தில் பதிவேற்றித் தேடினோம்.
அப்போது வங்கதேசத்தைச் சார்ந்த ஊடகங்களில் இந்த வீடியோ வெளியாகி இருந்ததைக் காண முடிந்தது. வங்க மொழியில் இருந்த பதிவை மொழிபெயர்த்துப் பார்த்தோம். அதில், “பரித்பூரில் உறங்கும்போது கணவனின் ஆண் உறுப்பை மனைவி வெட்டிவிட்டதாகக் கூறப்படுகிறது” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த வங்க மொழியில் இருந்த பதிவை அப்படியே காப்பி செய்து கூகுளில் பதிவிட்டு தேடினோம்.
அப்போது வங்கமொழியில் இந்த சம்பவம் தொடர்பாக வெளியான பல செய்திகள் நமக்கு கிடைத்தன. அதில் இந்த சம்பவம் ஜூன் 29ம் தேதி நடந்தது என்று குறிப்பிடப்பட்டிருந்தது. ஹனீஃப் ஷேக் என்பவரின் இரண்டாவது மனைவி சுமைனா அக்தர் சுமி என்பவர்தான் இந்த செயலை செய்தார் என்று கூறி அந்த பகுதி காவல் துறையினர் சம்பவ இடத்தில் வைத்து கைது செய்துள்ளதாக குறிப்பிடப்பட்டிருந்தது.

உண்மைப் பதிவைக் காண: jagonews24.com I Archive
அந்த நபருக்கு மொத்தம் மூன்று திருமணம் நடந்ததாகவும், ஒரு மனைவி தற்கொலை செய்து கொண்டார் என்றும் அந்த செய்தியில் கூறப்பட்டிருந்தது. சுமைனாவை திருமணம் செய்த பிறகு வேறு ஒரு பெண்ணை அந்த நபர் திருமணம் செய்து கொண்டதாகவும் வேறு பல பெண்களுடன் அந்த நபருக்கு பழக்கம் இருந்ததாகவும் சுமைனா தெரிவித்துள்ளார். இதை கேட்டால் சிகெரட்டால் சூடு வைத்து சித்ரவை செய்து வந்துள்ளார். இதனால் சுமைனா இந்த செயலை செய்ததாக போலீசிடம் கூறியதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இதன் மூலம் வங்கதேசத்தில் நடந்த ஒரு சம்பவத்தின் வீடியோவை எடுத்து, கேரளாவில் பெண் ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றவரின் ஆண் உறுப்பை வெட்டிய அண்ணன் என்று தவறான தகவல் சேர்த்து சமூக ஊடகங்களில் பகிர்ந்திருப்பது தெளிவாகிறது. இந்த ஆதாரங்கள் அடிப்படையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவு தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
வங்கதேசத்தில் கணவனின் கொடுமையை தாங்க முடியாது பெண் ஒருவர் கணவனின் ஆண் உறுப்பை வெட்டிய சம்பவத்தின் வீடியோவை தவறாக கேரளாவில் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ய வந்த நபரின் ஆண் உறுப்பை வெட்டிய அண்ணன் என்று தவறாக சமூக ஊடகங்களில் பகிர்ந்திருப்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…
Facebook I X Post I Google News Channel I Instagram


