‘’ திமுக வழங்கும் ரூ.1000 மாதாந்திர உதவித் தொகையை அதிமுக.,வினர் வாங்கக் கூடாது,’’ என்று எடப்பாடி பழனிசாமி கூறியதாக, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு நியூஸ் கார்டு பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் வழியே (+919049044263 & +919049053770) அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.

புதிய தலைமுறை லோகோவுடன் கூடிய இந்த நியூஸ் கார்டில், ‘’ நன்றி விசுவாசம் இல்லாதவர்கள்! அதிமுகவின் உண்மையான தொண்டர்கள் யாரும், கருணாநிதி பெயரிலான திட்டத்தில் வழங்கப்படும் 1000 ரூபாயை கை நீட்டி வாங்கமாட்டார்கள். அப்படி வாங்குபவர்கள் புரட்சித் தலைவர் தொடங்கிய அதிமுகவுக்கு நன்றி விசுவாசம் இல்லாதவர்கள் – அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ’’, என்று எழுதப்பட்டுள்ளது.

பலரும் இதனை உண்மை என நம்பி ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே திமுக அரசு சார்பாக, தமிழ்நாட்டில் உள்ள குடும்பத் தலைவிகளுக்கு மாதாந்திரம் ரூ.1000 நிதி உதவி வழங்கும் ‘மகளிர் உரிமைத் தொகை திட்டம்’ தொடங்கப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தின் முழு பெயர், கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் என்று உள்ளதால், அதிமுக.,வினர் இந்த திட்டத்தின்கீழ் எந்த உதவியும் பெறக்கூடாது என எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளதாக, மேற்கண்ட வகையில் சிலர் தகவல் பரப்புகின்றனர்.

ஆனால், இவ்வாறு எடப்பாடி பழனிசாமி எங்கேயும் கூறவில்லை. இதுதொடர்பாக, நாம் அதிமுக ஐ.டி., பிரிவு மற்றும் புதிய தலைமுறை தொலைக்காட்சியின் டிஜிட்டல் பிரிவு ஆகியவற்றில் பேசி உறுதிப்படுத்தியுள்ளோம்.

எனவே, நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட செய்தி புதிய தலைமுறை பெயரில் பரவும் போலியான ஒன்று என சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…

Facebook Page I Twitter PageI Google News Channel I Instagram

Avatar

Title:திமுக வழங்கும் ரூ.1000 மாதாந்திர உதவித் தொகையை அதிமுக.,வினர் வாங்கக் கூடாது என்று எடப்பாடி பழனிசாமி கூறினாரா?

Written By: Fact Crescendo Team

Result: False