காவல் துறையினரை தாக்கிய கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் என்று பரவும் வீடியோ உண்மையா?

False அரசியல் சார்ந்தவை | Political தேசிய அளவில் I National

காவல் துறையினர் மீது கரப்பான் பூச்சிகள் தாக்குதல் நடத்திய காட்சி என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive

தடுப்புகளுடன் இருக்கும் காவல் துறையினர் மீது இளைஞர்கள் சிலர் தாக்குதல் நடத்த முயலும் வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “இந்திய காவல் படை மீது கரப்பான் பூச்சிகள் தாக்குதல் நடத்திய காட்சிகள்….

 மத்திய அரசு கடும் நடவடிக்கை எடுத்து இவர்களை ஒடுக்க வேண்டும்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த வீடியோவை பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

டெல்லியில் போராட்டம் நடத்திய காக்ரோச் ஜனதா கட்சியினர் போலீசாரை தாக்கியதாக வீடியோ ஒன்றைப் பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர். வீடியோவை முழுமையாகப் பார்த்த போது, அந்த இளைஞர்கள் இந்தியர்கள் போல இல்லை. மேலும் காவலர்கள் வைத்திருந்த தடுப்பின் மீது Polisi என்று எழுதப்பட்டிருந்தது. இந்தியக் காவல் துறையில் Police என்றே எழுதப்பட்டிருக்கும். எனவே, இது வேறு நாட்டைச் சார்ந்த வீடியோவாக இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் ஆய்வு செய்தோம்.

வீடியோ காட்சிகளைப் புகைப்படங்களாக மாற்றி கூகுள் லென்ஸ் தளத்தில் பதிவேற்றித் தேடினோம். அப்போது இந்த வீடியோ 2025ம் ஆண்டு ஆகஸ்ட் மாதமே சமூக ஊடகங்களில் வெளியாகி இருந்ததைக் காண முடிந்தது. அதில் இந்த சம்பவம் இந்தோனேஷியாவில் நடந்தது என்று குறிப்பிடப்பட்டிருந்தது. காக்ரோச் ஜனதா பார்ட்டி போராட்டம் 2026ல் நடந்தது. அதற்கு முன்பாகவே வீடியோ வெளியாகி இருப்பதன் மூலம் இதற்கும் இந்தியாவில் நடந்த காக்ரோச் ஜனதா பார்ட்டி போராட்டத்துக்கும் தொடர்பில்லை என்பது உறுதியானது.

உண்மைப் பதிவைக் காண: timesofindia I Archive

இந்த சம்பவம் தொடர்பாக தொடர்ந்து தேடிய போது, 2025ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இந்தோனேஷியாவில் மாணவர்கள் நடத்திய போராட்டத்தின் போது போலீசார் நடத்திய தாக்குதலில் 21 வயது இளைஞர் உயிரிழந்தார். அதைத் தொடர்ந்து மாணவர்கள் போராட்டம் வெடித்தது. காவல் துறையினர் மீது மாணவர்கள் தாக்குதல் நடத்தினர்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

உண்மைப் பதிவைக் காண: gettyimages.in I Archive

இந்தோனேஷியா போலீசில் Polisi என்று குறிப்பிடப்படுமா என்று அறிய ஆய்வைத் தொடர்ந்தோம். Polisi என்று அவர்கள் தடுப்புகள் வைத்திருக்கும் பல புகைப்படங்கள் நமக்கு கிடைத்தன. இதனுடன் போராட்டம் நடந்த இடத்தின் கூகுள் ஸ்ட்ரீட் வியூ காட்சியையும் தேடி எடுத்தோம். இவை எல்லாம் இந்த வீடியோ இந்தியாவில் காவல் துறையினர் மீது கரப்பான் பூச்சி ஜனதா கட்சி ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்திய போது எடுக்கப்பட்டது இல்லை என்பதை உறுதி செய்தன. இந்த ஆதாரங்கள் அடிப்படையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவு தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

இந்தோனேஷியாவில் மாணவர்கள் நடத்திய போராட்டத்தின் வீடியோவை இந்தியாவில் காக்ரோச் ஜனதா கட்சியினர் போலீசார் மீது தாக்குதல் நடத்திய காட்சி என்று தவறாக சமூக ஊடகங்களில் பதிவிட்டிருந்ததை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I X Post I Google News Channel I Instagram

Result Stamp

Title: காவல் துறையினரை தாக்கிய கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் என்று பரவும் வீடியோ உண்மையா?

Fact Check By: Chendur Pandian

Result: False

Leave a Reply